சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள்: சென்னையின் முக்கிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
சென்னை,
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர். பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு விரைவு போக்கு வரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 4 நாட்கள் சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன. மேலும் மற்ற முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்பட்ட 2 ஆயிரத்து 92 பஸ்களுடன் 2 ஆயிரத்து 165 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 257 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இன்று சிறப்பு பஸ்களுடன் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் இதுவரை 2¾ லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
இதனால் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது. மதியத்தில் இருந்தே மக்கள் பஸ் நிலையத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். கிளாம்பாக்கம் பஸ் முனையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதைபோல சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இடம் பிடிப்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்பதிலே மக்கள் பயணம் செய்து வருகின்றனர். உடைமைகளை பத்திரமாக எடுத்து செல்லுமாறு ரெயில்வே போலீசார் அறிவுறுத்தினர்.
தனியார் பஸ்களிலும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்தனர். இதுதவிர சென்னையில் வசிப்பவர்களில் பலர் கார்கள் உள்ளிட்ட தங்களது சொந்த வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னையின் முக்கிய இடங்களனா தாம்பரம், பெருங்களத்தூர், ஜி.எஸ்.டி. சாலை, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் தீபாவளி பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






