2-ம் கட்ட கட்டுமானப் பணிகள்: மெட்ரோ ரெயில் சேவையில் திடீர் மாற்றம்

கோப்புப்படம்
சென்னையில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் வரும் 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மேலே நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளின் காரணமாக, பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவைகள் வருகின்ற 15.09.2025 முதல் 19.09.2025 வரை தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது.
1. நீல வழித்தடத்தில் (விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை ஏஜி-டி.எம்.எஸ் வழியாக) இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவையில் (நேரம் மற்றும் அட்டவணையில்) எந்த மாற்றமும் இருக்காது.
2. பச்சை வழித்தடத்தில் (மேற்கண்ட நாட்களில் மட்டும் காலை 5 மணி முதல் 6 மணி வரை):
• பரங்கி மலை மெட்ரோ நிலையம் முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரெயில்கள் 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
• விமான நிலையம் மெட்ரோ நிலையம் முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரெயில்கள் 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
• புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் கோயம்பேடு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரெயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கோயம்பேடு முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை பின்வரும் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன:
• 15.09.2025 முதல் 19.09.2025 வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
• இந்த நேரத்தில் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் அசோக் நகர் மெட்ரோ நிலையம் இடையே, காலை 5 மணி முதல் 6 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
• காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல் தொடங்கும் மற்றும் வழக்கமான மெட்ரோ ரெயில் அட்டவணை (வாரநாள்/ சனிக்கிழமை/ ஞாயிறு கால அட்டவணை) பின்பற்றப்படும்.
இந்த தற்காலிக மாற்றங்கள், இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் சீராகவும், சரியான நேரத்திலும் நடைபெறுவதற்கு அவசியமானவை. இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது. இந்த நேரத்தில் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






