தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 6,679 பேர் எழுதினர்

தூத்துக்குடியில் காவலர் எழுத்து தேர்வினை தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று 2025ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களுக்கு, சிறப்பு அதிகாரியாக தமிழ்நாடு காவல்துறை நிர்வாகப் பிரிவு காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருந்தார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று (9.11.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி. மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, காமராஜ் கல்லூரி, புனித மரியன்னை கல்லூரி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இதனையடுத்து மேற்சொன்ன தேர்வு மையங்களுக்கு இன்று (9.11.2025) தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற காவலர் எழுத்து தேர்வில் மொத்தம் 7,556 விண்ணப்பதாரர்களில் 5,070 ஆண் விண்ணப்பதாரர்கள், 1,609 பெண் விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 6,679 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் மீதமுள்ள 877 பேர் தேர்வு எழுதவில்லை.






