மதுரை ஐகோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை.. என்ன காரணம்..?


மதுரை ஐகோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை.. என்ன காரணம்..?
x

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி பொட்டியம்மாள். இவர்களுடைய இளைய மகன் மகாலிங்கம் (வயது 30). இவர், கடந்த 2022-ம் ஆண்டில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் ராஜபாளையம் பட்டாலியனில், போலீஸ்காரராக சேர்ந்தார். தற்போது மதுரை ஆயுதப்படையில் பணியாற்றினார். மதுரை ஐகோர்ட்டில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் மகாலிங்கம் உள்ளிட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஐகோர்ட்டு பிரதான வாசல் பகுதியில் எஸ்.எல்.ஆர். வகை துப்பாக்கிகளை ஏந்தி பாதுகாப்பு பணியில் இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் மகாலிங்கம், துப்பாக்கியை ஏந்தியபடி அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த மற்ற போலீஸ்காரர்கள், அதிக குளிராக இருப்பதால் அவர் அவ்வாறு நடந்து உடலை சூடேற்றிக் கொண்டு இருப்பதாக கருதினர். சற்று நேரத்தில் ஒரு கட்டிடத்தில் அவர், திடீரென தன் நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக போலீசார் ஓடிவந்து பார்த்தனர். மகாலிங்கம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மகாலிங்கத்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறும்போது, மகாலிங்கம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரித்து வருவதாக கூறினர்.

இதற்கிடையே மகாலிங்கம் எழுதிவைத்த கடிதம் சிக்கி இருப்பதாகவும், அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மகாலிங்கத்தின் மூத்த அண்ணன், காவல் துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பாக மகாலிங்கத்தின் குடும்பத்தினர், உறவினர்கள் திரண்டனர். அவரது உடலைப்பார்த்து அவர்கள் கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

1 More update

Next Story