அரசியல் நிகழ்வுகள் திருப்தியாக இல்லை - அண்ணாமலை

கொஞ்சம் பொறுமையாக இருப்போம். சரியான பாதையில் பயணிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்று அண்ணாமலை கூறினார்.
சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
டிடிவி தினகரன் பிரதமர் மோடி மீது நல்ல மரியாதை வைத்திருக்கிறார். ஏற்கனவே அவரிடம் பொறுமையாக இருக்குமாறு கூறினேன். நல்லவொரு இலக்குடன் சரியான முறையில் பயணம் செய்ய வேண்டும். கடந்த 3 நாட்களாக நடக்கக் கூடிய செயல்கள் எனக்கும் திருப்தியாக இல்லை.
தமிழக வாக்காளராக, ஒரு மனிதராக, பாஜகவின் தொண்டனாக சரியாக படவில்லை. 3 நாட்களாக நடக்கும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் பொறுமையாக இருப்போம். சரியான பாதையில் பயணிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கைப்படி மக்களை சந்திக்கட்டும். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளது.
விஜய் பாஜகவை முதன்மை எதிரி என்று சொல்லிவிட்டு தனிப் பாதையில் பயணித்து வருகிறார். அப்படி இருக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெகவை இணைக்க முடியுமா என்று தெரியவில்லை. புதிதாக கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதை விட, இருக்கும் கட்சிகளின் மூலம் வலிமைப்படுத்த வேண்டும். அடுத்த 2, 3 மாதங்கள் மிகவும் முக்கியமானது. தலைவர்கள் களத்தில் வரும் போது மக்கள் கவனிப்பார்கள்” என்றார்.






