ரகசிய காதல் உறவில் கர்ப்பம்... குழந்தை பெற்றெடுத்த கல்லூரி மாணவி... அடுத்து நடந்த பரபரப்பு

கல்லூரி மாணவியும் ரகசிய காதல் கணவரும் சென்னையில் வந்து குடியேறினார்.
சென்னை,
ஊட்டியில் உள்ள கல்லூரியில் சேலத்தை சேர்ந்த மாணவி (வயது 21) பி.எஸ்.சி. பட்ட படிப்பு படித்தார். அவரோடு படித்த மாணவர் ஒருவரை காதலித்தார். இருவரும் கல்லூரி இளங்கலை படிப்பில் 3 ஆண்டுகளாக ஊட்டியில் காதல் பறவைகளாக சுற்றி வந்தனர். அலைபாயுதே சினிமா பட பாணியில் ரகசிய திருமணமும் செய்து கொண்டு உல்லாசத்திலும் ஈடுபட்டனர்.
அப்படி ஒரு நாள் ஈடுபட்ட உறவில் அந்த மாணவி கர்ப்பமானார். கர்ப்பத்தை வயிற்றில் சுமந்தபடி அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்தாா். அவரது ரகசிய காதல் கணவரும் சென்னையில் வந்து குடியேறினார். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 பரீட்சை எழுத சைதாப்பேட்டையில் தங்கி இருந்து பயிற்சி நிறுவனம் ஒன்றில் படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதாவதை கண்டு சக மாணவிகள் சந்தேகத்துடன் பார்த்தனர். வயிற்றில் கட்டி வளர்வதாகவும், அதற்கு ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாணவி விளக்கம் அளித்தார். வயிற்றில் வளர்ந்த குழந்தை 7 மாத கருவில் தாண்டியது. நேற்று முன்தினம் மற்ற மாணவிகள் ஊருக்கு போய்விட்டனர்.
குறிப்பிட்ட மாணவி மட்டும் அறையில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பெற்ற வலியை விட விஷயம் ஊருக்கு தெரிந்தால் அதைவிட பெரிய மனவலியை சந்திக்க நேரிடுமே என்று மாணவி பயந்தார். காதலனுக்கு தகவல் கொடுத்தார். காதலனும் குழந்தையோடு மாணவியை திருவல்லிக்கேணி பகுதிக்கு அழைத்து வந்தார். அங்கு ஒரு லாட்ஜில் இருவரும் அறை எடுத்து தங்கினார்கள்.
குழந்தையை என்ன செய்வது என இருவரும் யோசித்தாா்கள். பின்னர் இருவரும் சேர்ந்து குழந்தையை ஒரு கட்டைப்பையில் போட்டு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு குழந்தையை பையோடு நைசாக தூக்கிபோட்டுவிட்டு தப்பியோட பார்த்தனர். ஆனால் அங்கு காவல் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் அவர்கள் இருவரையும் சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரித்தார்.
அனாதையாக குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையை ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்ததாக இருவரும் தெரிவித்தனர். ஆனால் போலீஸ்காரர் அவர்கள் மீது சந்தேகப்பட்டு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். குழந்தை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. மாணவியை அவர் தங்கி இருந்த விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
காதலன் கோர்ட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த பிரச்சினையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோர்ட்டூர்புரம் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






