திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் தற்போது சர்வ சாதாரணமாக உள்ளது: ஐகோர்ட்டு கருத்து

உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்க்க சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மதுரை,
நெல்லையை சேர்ந்த வாலிபர் கடந்த 2014ம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது இளம்பெண் ஒருவரை காதலித்து உள்ளார். அந்த சமயத்தில் தனது காதலியுடன் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது இதனை அறிந்த அவரது காதலி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் பாலியல் பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வள்ளியூர் கோர்ட்டில் அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வாலிபர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு :-
மனுதாரரும், இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நீண்ட கால பாலியல் உறவின் போது புகார்தாரர் எதிர்ப்பு தெரிவிக்கமால் இருந்தது, இருவரின் சம்மதத்தின் அடிப்படையிலான உறவு என்பதை குறிக்கிறது. மேலும் மனுதாரர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததற்கான ஆதாரங்கள் இல்லை. இருவர் தாமாக முன்வந்து நீண்ட நாளாக உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபடும்போது, அந்த உறவின் அடுத்தடுத்த முறிவு, ஏற்பட்ட பின் குற்றவியல் சட்டத்தினை பயன் படுத்துவது தவறு. இதுபோன்ற விஷயங்களை கோர்ட்டு உறுதியாகத் தீர்மானிப்பது சாத்தியமில்லை.திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் தற்போது சர்வ சாதாரணமாக உள்ளது.
தனிப்பட்ட நடத்தையை ஒழுங்குபடுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது.சமீப காலமாக இது போன்ற வழக்குகளை கோர்ட்டுகள் அதிகமாக எதிர்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மனுதாரர் மீது நிலுவையில் உள்ள வழக்கு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக இருப்பதால் அதனை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது’ இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.






