ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந் தேதி சபரிமலை செல்கிறார்


ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந் தேதி சபரிமலை செல்கிறார்
x
தினத்தந்தி 6 Oct 2025 9:44 PM IST (Updated: 7 Oct 2025 4:05 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு 22-ந் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலையில் நடை திறக்கப்படுகிறது. 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையொட்டி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

இந்தநிலையில் வருகிற 22-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக கேரள அரசுக்கு தகவல் வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 22-ந் தேதி தனி விமானம் மூலம் கொச்சி வருகிறார். அங்கிருந்து மதியம் ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார்.பின்னர் கார் மூலம் பம்பை வரும் அவர், பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்டி நடை பயணமாக சபரிமலை சன்னிதானம் செல்கிறார். மாலையில் அவர் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு 22-ந் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதே போல் நிலக்கல் முதல் சபரிமலை வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலக்கல் - பம்பை வழித்தடத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சபரிமலை தரிசனத்தை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 24-ந் தேதி வரை கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் 19-ந் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதாக இருந்தது. அப்போது காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அவரது வருகை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story