ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

கோப்புப்படம்
தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார்.
வேலூர்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) வேலூர் தங்கக்கோவிலுக்கு வருகை தர உள்ளார். அவர் காலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு 11 மணி அளவில் வேலூர் தங்கக்கோவிலுக்கு வருகிறார். அங்கு வெள்ளி விநாயகரை தரிசனம் செய்கிறார். பின்னர் மகாலட்சுமி மற்றும் ஸ்ரீநிவாச பெருமாள் ஆகிய சாமிகளையும் தரிசனம் செய்து விட்டு, வைபவ லட்சுமிக்கு அவர் பூஜைகள் செய்கிறார்.
தொடர்ந்து தங்கக்கோவிலை பார்வையிட்டு கோவில் வளாகத்தில் சக்திஅம்மா முன்னிலையில் மரக்கன்றுகள் நடுகிறார். இதன் பின்னர் 12.30 மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருப்பதிக்கு செல்கிறார். அவரது நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகப்பகுதி முழுவதும் தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கோவில் வளாகம், ஸ்ரீபுரம் பகுதிகளிலும் 2 அடுக்கு பாதுகாப்புடன் 1,700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. ஜனாதிபதி நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி முருகன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.






