பிரதமர் மோடி கோவை வருகை எதிரொலி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

கோப்புப்படம்
விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவைக்கு வருகை தர உள்ளார்.
கோவை,
கோவை கொடிசியாவில் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு நாளை (19-11-2025) தொடங்குகிறது. 3 நாட்கள் (21ம் தேதி வரை) நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருது வழங்குகிறார். இந்த மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வருகிறார். கோவை விமான நிலையத்தில் பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பினை ஏற்றுக்கொண்டு, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கொடிசியா அரங்கம் வந்து விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் , மாலை 3.30 மணிக்கு கோவை விமான நிலையத்தை அடைகிறார். பின்னர் தனி விமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள் அரங்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் தற்காலிகமாக 'ரெட் ஜோன்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் இன்று முதல் நாளை இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் கோவை வருகை எதிரொலியாக, டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கொடிசியா, பீளமேடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 15 டாஸ்மாக் கடைகள், 5 பார்கள், 18 (FL 2) உயர்தர பார்களை மூட கோவை கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






