திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காரைக்குடி மாநகராட்சி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோதச் செயல்கள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் உள்ள திமுக-வைச் சேர்ந்தவர்கள், சட்ட விதிகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதும், மற்ற கட்சிகளின் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பொதுமக்களை மிரட்டுவதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றன.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதன் விபரம் வருமாறு :
* திமுக-வைச் சேர்ந்த காரைக்குடி மாநகராட்சி மேயர், மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல், முன்அனுமதி மூலமாக தனக்கு வேண்டியவர்களுக்கு ஆதாய நோக்கத்துடன் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை வழங்கி உள்ளதாகவும்; இதில் பெரிய அளவு முறைகேடு நடந்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
* மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்களை மன்றத்தில் பேசவிடாமல் மிரட்டுவதோடு, பெண் கவுன்சிலர்களையும், அதிகாரிகளையும் தரக்குறைவாகப் பேசியும், மிரட்டியும் வருவதாகப் புகார்கள் வந்துள்ளன.
* மாநகராட்சி இடங்களுக்கு குறைவான வாடகை நிர்ணயம் செய்து,பல ஆண்டுகளுக்கு தனியார் முதலாளிகளுக்கு ஆதாய நோக்கத்துடன் குத்தகைக்கு விட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
* புதிய அடுக்குமாடி வீடுகளுக்கும், தனி வீடுகளுக்கும் வரி விதிப்பு செய்வதில் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக மக்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், திமுக-வைச் சேர்ந்த காரைக்குடி மாநகராட்சி மேயரின் அடாவடி மற்றும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும்; மாநகராட்சி மேயரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் 15.7.2025 – செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில், காரைக்குடி மாநகராட்சி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளர் . ஹ.மு. சீனிவாசன் அவர்கள் தலைமையிலும்; சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் ஞசு. செந்தில்நாதன், அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற, நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும்; காரைக்குடி மாநகராட்சி மன்ற நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.. என தெரிவித்துள்ளார் .






