தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் தலைமை வகித்தார்.
தொழிற்சங்கங்களோடு எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் நடத்தாமல் கார்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக 2020-ம் ஆண்டு மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய மோடி அரசாங்கம் நவம்பர் 21 அன்று வெளியிட்டது.
இது நாடு முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் நடவடிக்கைக்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை கொட்டும் மழையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் பாலசிங்கம், மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், ராஜ்குமார், சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் காசி முனியசாமி, தேவேந்திரன், சந்திரா, எச்எம்எஸ் மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் துறைமுகம் சத்யா, மாநில நிர்வாகி ராஜலட்சுமி ராஜ்குமார், ஏஐசிசிடியு சார்பில் மாநில துணைத் தலைவர் சகாயம், யூடியூசி சார்பில் மாவட்ட அமைப்பாளர் அலெக்சாண்டர் உள்பட தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.
கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு சர்வாதிகாரமான முறையில் திணித்துள்ள தொழிலாளர் விரோத நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்றும், அதுவரை தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவது என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.






