இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்

கச்சத்தீவுக்கு குடும்பத்துடன் சென்று அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்
Published on

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி 4 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றிருந்த 30 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மீனவர்கள் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரத்தில் நேற்று மீன்பிடி டோக்கன் அலுவலகம் முன்பு அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா பேசியதாவது:-

நடுக்கடலில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகமாக நடைபெற்று வருகிறது. இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரியும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்த உள்ளோம்.

அதாவது, ராமேசுவரத்தில் உள்ள அனைத்து மீனவ குடும்பத்தினர், படகுகளில் சென்று கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் நடத்த உள்ளோம். விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும்.

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பிரதமர் நினைத்தால் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com