மின்கம்பி அறுந்ததால் காட்டுப்பகுதியில் நின்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்: பயணிகள் அவதி

இரண்டரை மணி நேரம் தாமதமாக ராமேசுவரம் சென்று சேர்ந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சில நாட்களாக மின்சார என்ஜின் மூலம் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் செயல்பட்டு வருவதால், அங்குள்ள விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் பறந்து செல்லும்போது இடையூறு ஏற்படாமல் இருக்க சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு மின்கம்பி இல்லை. வரும் வேகத்தில் ெரயில்கள் தானாகவே அந்த இடத்தை கடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5.45 மணிக்கு ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று காலை காலை உச்சிப்புளி அருகே சென்றபோது, என்ஜினில் இருந்து மின்கம்பியுடன் உரசியபடி செல்லும் கம்பி திடீரென உடைந்து விழுந்தது. மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன.
இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அந்த ரெயில் காட்டுப்பகுதியில் நின்றது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டதும் ராமேசுவரத்தில் இருந்து டீசல் என்ஜின் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் அந்த ரெயில் காலை 10.45 மணி அளவில் ராமேசுவரம் சேர்ந்தது. வழக்கமாக காலை 8.15-க்கு சென்று சேர வேண்டிய இந்த ரெயில் நேற்று 2½ மணி நேரம் தாமதமாக சென்றதால், பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.
இதற்கிடையே உச்சிப்புளி அருகே மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்துக்கு சிறப்பு என்ஜின் கொண்டு செல்லப்பட்டு, மின்கம்பியை சீரமைப்பு பணி நடந்தது. பிற்பகலில் பணி முடிந்து மின் வினியோகம் வழங்கப்பட்டது.
இதனால் மதுரையில் இருந்து நேற்று காலை ராமேசுவரம் புறப்பட்ட பயணிகள் ரெயில் பரமக்குடி வரை மட்டுமே இயக்கப்பட்டது. ஆனால், ராமேசுவரத்தில் இருந்து நேற்று மாலை சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் மின்சார என்ஜின் உடனேயே இயக்கப்பட்டன.






