சேலம்: நோய் தாக்கிய நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

நெற்பயிரை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் கிழக்கு கரை கால்வாய் தண்ணீரை பயன்படுத்தி கிழக்கு கரை கால்வாய் மற்றும் கிளை வாய்க்கால் நீர் பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் தேவூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. மேலும் பனிப்பொழிவும் தொடங்கியது. இந்நிலையில் நெல் பயிர்களில் ஆனைக்கொம்பன் ஈ மற்றும் இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் உள்ளிட்ட நோய் தாக்கத்தால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக தேவூர் சோழக்கவுண்டனூர், மேட்டுப்பாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் சென்று நெற்பயிரை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
தற்போது ஆந்திரா பொன்னி, அம்மன் பொன்னி, தனிஸ்கா, சாதனா, சந்தியா, அன்னப்பூரணி, வெள்ளை பொன்னி உள்ளிட்ட நெல் வகைகள் நடவு செய்யப்பட்ட வயல்களில் ஆனை கொம்பு, இலை சுருட்டு, மணிக்கட்டு, பூச்சிக்கட்டுதல் உள்ளிட்ட நோய் தாக்கத்திலிருந்து நெற்பயிர்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சேலம் வேளாண்மை துணை இயக்குனர் கமலம், சேலம் சந்தியூர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் ரவி, சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) விமலா, சங்ககிரி துணை வேளாண்மை அலுவலர் பழனிசாமி, தேவூர் உதவி வேளாண்மை அலுவலர் விக்னேஷ் உள்ளிட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் நெற்பயிர் நடவு செய்யப்பட்ட வயல்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றங்களால் நெற்பயிரில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் அதிக மகசூல் பெறுவது குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.






