தஞ்சை அருகே பள்ளி ஆசிரியை படுகொலை: 13 ஆண்டு காதலன் செய்த வெறிச்செயல்


தஞ்சை அருகே பள்ளி ஆசிரியை படுகொலை: 13 ஆண்டு காதலன் செய்த வெறிச்செயல்
x
தினத்தந்தி 27 Nov 2025 1:07 PM IST (Updated: 27 Nov 2025 1:08 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியைக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கோபத்தில் அவரை காதலன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக காவியா (வயது 26) பணிபுரிந்து வந்தார். அவர் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார்.

வரும் வழியில், கள்ளிக்குப்பம் என்ற இடத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் அவருடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே, மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால், காவியாவை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் காவியா கீழே சாய்ந்ததும், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

கீழே விழுந்த காவியா சற்று நேரத்தில் துடிதுடித்து இறந்துபோனார். அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். காவியாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், கொலையாளி குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காவியாவை கொன்றது அவருடைய முன்னாள் காதலர் அஜித்குமார் என்று கூறப்படுகிறது. தற்போது, காவியாவுக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், 13 வருடம் காதலித்து வந்த அஜித்குமார், கோபத்தில் அவரை கொலை செய்தார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தப்பியோடிய குற்றவாளி அஜித்குமாரை போலீசார் வலைவீசி தேடிவந்தநிலையில், தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர் சரணடைந்தார். பட்டப்பகலில் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story