தீபாவளி முடிந்து பள்ளிகள் திறப்பு: திருப்பூரில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் வருகை

தீபாவளி பண்டிகை கடந்த 20-ந்தேதி கொண்டாடப்பட்டது.
திருப்பூர்,
தீபாவளி பண்டிகை கடந்த 20-ந்தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக 21-ந்தேதியும் அரசு விடுமுறை விடப்பட்டது. பண்டிகையை கொண்டாட திருப்பூரில் வசிக்கும் வெளிமாநில, மாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். அவர்கள் தற்போது திருப்பூருக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
இதனிடையே நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. ஆனால் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றிலிருந்து வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட தொடங்கின. ஆனால் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. குறிப்பாக மாநகராட்சி பள்ளிகளில் இந்த எண்ணிக்கை மிகமிக குறைவாக இருந்தது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இன்னும் முழுமையாக திருப்பூருக்கு திரும்பாததால் இந்தநிலை இருந்தது. மாநகராட்சி பள்ளிகளில் இன்று 60 சதவீத (பாதியளவு) மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர். இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். குறைந்த அளவிலேயே மாணவர்கள் வந்துள்ளதால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.






