கன்னியாகுமரியில் இன்று கடல் உள்வாங்கியது-சுற்றுலா பயணிகள் பீதி

விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் மட்டும்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது.
கன்னியாகுமரியில் இன்று கடல் உள்வாங்கியது-சுற்றுலா பயணிகள் பீதி
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் சீற்றம், கடல் உள்வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது போன்ற பல்வேறு இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து பெய்த மழையினாலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கன்னியாகுமரியில் அலையே இல்லாமல் கடல் குளம்போல் காட்சி அளித்தது.

இந்தநிலையில் மழை சற்று ஓய்ந்த நிலையில் இன்று கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இந்த பகுதியில் சுமார் 100 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் பவள திட்டுகள் வெளியே தெரிந்தன. சில இடங்களில் கடற்கரை பகுதி நீண்ட நெடிய தூரம் மணல் பரப்பாகவும் காட்சியளித்தது.

விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் மட்டும்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது. ஆனால் படகு போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில் தெற்கே அமைந்துள்ள இந்திய பெருங்கடலும் மேற்கே அமைந்துள்ள அரபிக்கடலும் பயங்கர சீற்றமாக காணப்படுகிறது. இதனால் இந்த கடல் பகுதியில் ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வரும் ராட்சத அலைகள் கரையை நோக்கி வந்து பாறைகளில் முட்டி மோதி சிதறும் காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடலில் இறங்கி குளிப்பதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com