விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரம்: மேலும் ஒருவர் கைது

தனியார் நிறுவன பெண்கள் தங்கும் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்க கூடிய தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இங்கு பணியாற்றக்கூடிய பெண் ஊழியர்கள் தங்குவதற்காக உத்தனப்பள்ளி அருகே லாலிக்கல் கிராமத்தில் அடுக்குமாடி விடுதி கட்டப்பட்டுள்ளது. 11 மாடிகளுடன் மொத்தம் 11 கட்டிடங்கள் உள்ளன. அதில் 9 கட்டிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதில் ஒரு அறைக்கு 4 ஊழியர்கள் வீதம் மொத்தம் 6,250 தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 4-வது பிளாக்கில் உள்ள 8-வது மாடி அறை ஒன்றில் இருந்த குளியல் அறையில் ரகசிய கேமரா இருந்தது. இதையடுத்து பெண் ஊழியர்கள் கடந்த 4-ந்தேதி மாலை முதல் நேற்று முன்தினம் காலை வரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கேமராவை வைத்தது அதே நிறுவனத்தில் பணிபுரிந்து விடுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22 வயது) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது நண்பர் சந்தோஷ் என்பவர் ரகசிய கேமராவை நீலுகுமாரியிடம் கொடுத்து குளியல் அறையில் வைக்க சொன்னதாக கூறினார். இதைத்தொடர்ந்து நீலுகுமாரியிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவரது ஆண் நண்பரின் பெயர் ரவிபிரதாப் சிங் என்றும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், போலீசை திசை திருப்ப வேறு பெயர் கூறி நாடகமாடியதும் தெரிய வந்தது.
இதனிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ரவிபிரதாப் சிங் பெங்களூருவில் இருந்து பீகாருக்கு தப்பி சென்றார். அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் பீகார் சென்றனர். அவர்கள் பீகார் மாநில போலீஸ் உதவியுடன் ரவிபிரதாப் சிங்கை தேடி வந்தனர்.
இதனிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரவிபிரதாப் சிங்கை கைது செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அனைத்து அறைகளையும் தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு சோதனை செய்ய வேண்டும் என்று கூறி நேற்று 3-வது நாளாக விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து 6 பேரும், பெங்களூருவில் இருந்து 4 பேரும் என 10 தொழில் நுட்ப வல்லுனர்கள் குழு நேற்று ராயக்கோட்டை வந்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று வேறு எங்கும் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஓசூர் தனியார் நிறுவன பெண்கள் தங்கும் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலு குமாரியின் ஆண் நண்பரான ரவிபிரதாப் சிங்கை டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ஓசூர் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.






