”தமிழர்களிடையே தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான்..” வைகோ திடீர் புகழாரம்

சீமானின் முயற்சிகள் வெற்றி பெறட்டும் என வைகோ தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
பசும்பொன்னில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்திக்கவிருந்தபோது, அவ்விடத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். அப்போது அவரை சீமான் வரவேற்றார். இருவரும் ஆரத்தழுவி அன்பை பரிமாரிக்கொண்டனர். இதையடுத்து சீமானை புகழ்ந்து வைகோ செய்தியாளர்களிடையே பேசியதாவது;
”இளையோர் உள்ளங்களில் புயல் வீசி வரும் செந்தமிழன் சீமானை பசும்பொன்னில் சந்தித்தது மகிழ்ச்சி. லட்சக்கணக்கான தமிழர்கள் மனதில் தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர் சீமான். நான் மருத்துவமனையில் இருந்தபோது சீமான் வந்து பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கவலையோடு நான் விசாரிப்பேன். என் அம்மா இறந்தபோது கலிங்கப்பட்டி வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்து விட்டார். இனி எங்கள் பயணம் தொடரும். ஒற்றுமையாக பயணிப்போம். சீமானின் முயற்சிகளும் வெற்றி பெறட்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.






