வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு.. டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாப பலி

இந்த சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டீக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித் (வயது 35). இவரது கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தவர் பாலகுரு (50). டீக்கடைக்கு வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு தொங்கவிடப்பட்டிருந்தது. இன்று காலை சீரியல் பல்பு, கடையில் உள்ள இரும்பு கம்பியில் உரசிக் கொண்டிருந்தது.
அப்போது, சீரியல் பல்பு தொங்கிக் கொண்டிருந்த மின் வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
இதை தற்செயலாக தொட்ட பாலகுரு மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற முயன்ற கடை உரிமையாளர் ரஞ்சித் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துபோயினர். இதுகுறித்து, வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






