1-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் - தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

தனியார் பள்ளியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர் உண்ணாமலைசெட்டி சாவடியை சேர்ந்தவர் சங்கர் (67 வயது). ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவர், நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், பள்ளியில் 1-ம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி, தனது வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள். உடனடியாக அவளை சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சங்கரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.






