சிவகங்கை: மேம்பாலத்தில் சென்ற பஸ்சில் திடீர் தீ - 50 பயணிகள் தப்பினர்

டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி, பயணிகளை வெளியேற்றினார்.
சிவகங்கை,
மதுரையில் இருந்து சிவகங்கை, காளையார்கோவில், மறவமங்கலம் வழியாக இளையான்குடிக்கு தினசரி தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் இளையான்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை வழியாக மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் முத்துக்குமார் ஓட்டிவர் ஓட்டினார். பாலமுருகன் என்பவர் கண்டக்டராக இருந்தார். சிவகங்கையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் வழியாக பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, என்ஜின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி தீப்பிடிக்க தொதாடங்கியது. பஸ் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறினர்.
உடனடியாக டிரைவர் முத்துக்குமார், பஸ்சை பாலத்தின் ஓரத்தில் நிறுத்தி அனைவரையும் உடனடியாக கீழே இறங்க செய்தார். தகவல் அறிந்து தீயணைப்புத்துறை அலுவலர் நாகநாதன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கூட்டம் கூடியது. அப்போது 2 மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டதில் 2 பேர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.






