சிவகங்கை: வாகனம் மோதி 3 பேர் பலியான சம்பவம்; போலீஸ் டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு


சிவகங்கை:  வாகனம் மோதி 3 பேர் பலியான சம்பவம்; போலீஸ் டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
x

போலீஸ் ஜீப் டிரைவர் பாலமுருகன் மீது 3 பிரிவுகளில் பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

திருப்புவனம்,

மதுரை அருகே சிட்டம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 26). இவருடைய மனைவி சத்யா (23). இவர்களுடைய 3 வயது குழந்தை அஸ்வின். நேற்று தனது மனைவி, குழந்தையுடன் அனஞ்சியூர் கிராமத்தில் துக்க நிகழ்ச்சிக்கு பிரசாத் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து அண்ணி சோனை ஈஸ்வரியை (40) அழைத்துக்கொண்டு 4 பேராக மோட்டார் சைக்கிளில் சிட்டம்பட்டி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

பூவந்தி அருகே அஞ்சுயூர் விலக்கு பகுதியில் வந்தபோது அப்பகுதியில் போலீஸ் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனமும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பிரசாத், அவருடைய மனைவி சத்யா, குழந்தை அஸ்வின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த போலீஸ் வாகனத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்துள்ளார். ஏட்டு பாலமுருகன் என்பவர் அந்த வாகனத்தை ஓட்டி வந்தார். இவர்கள் மதுரை வந்துவிட்டு திரும்பிச்சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் போலீஸ் வாகன டிரைவரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், விபத்து தொடர்பாக போலீஸ் ஜீப் டிரைவர் பாலமுருகன் மீது கவன குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்பட 3 பிரிவுகளில் பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

1 More update

Next Story