வடபழனி, கந்தகோட்டத்தில் இன்று சூரசம்ஹாரம்: நாளை திருக்கல்யாணம்

வடபழனி, பாரிமுனை கந்தகோட்டம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று (திங்கட்கிழமை) மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
சென்னை,
தமிழ் கடவுளாகப் போற்றப்படும் முருகப்பெருமான், அசுரன் சூரபத்மனை வதம் செய்த நாள் சூரசம்ஹாரமாகும். தீமையை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டிய நிகழ்வாக கருதப்படும் இதுவே முருக வழிபாட்டின் உச்சமாகக் கொள்ளப்படுகிறது. ஐப்பசி மாதத்தில், தீபாவளிக்குப் பிறகு வரும் அமாவாசை பிரதமை தொடங்கி சஷ்டி வரை நடைபெறும் 6 நாட்கள் தான் கந்த சஷ்டி விரதம். அதன் இறுதி நாளாக சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
அந்தவகையில் முருக பெருமான் கோவில்களில் இன்று (திங்கட்கிழமை) சூரசம்ஹாரம் திருவிழா நடக்கிறது. இதனையொட்டி முருகன் கோவில்களில் சாமிக்கு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம், பூஜை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் தற்போது திருவிழா களைகட்டிக் கொண்டுள்ளது. சூரசம்ஹாரத்தைக் காண இன்று மட்டும் திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முருகன் கோவில்கள்
அந்தவகையில், சென்னையை பொருத்தவரையில் வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி கோவில், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், திருப்போரூர் சுப்பிரமணிய சாமி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்களில் இன்று மாலை சூரசம்ஹாரம் திருவிழா நடக்கிறது.
சூரசம்ஹார நிகழ்விற்காக முருக பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக கந்த சஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். ஆனால், விரதம் பின்பற்ற முடியாதவர்கள் சூரசம்ஹாரம் நாளான இன்று ஒரு நாள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
திருக்கல்யாணம்
அதுவும், முருகனுக்கு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம், பூஜை, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுவது ஆன்மீக பலனை அளிக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இன்று நடக்கும் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு முருகன் கோவில்கள் அனைத்தும் ஆன்மீக உற்சாகத்தில் மிதக்கின்றன. பக்தர்கள் அனைவரும் தீமையை வென்று, தெய்வீக ஒளியால் வாழ்வை ஒளிரச் செய்ய வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாளை (செவ்வாய்கிழமை) மாலை 6 மணி அளவில் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.






