தூத்துக்குடியில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சப்-இன்ஸ்பெக்டர்கள்/சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் (Child Welfare Officer) செயல்பட்டு வருகின்றனர்.
மேற்சொன்ன குழந்தைகள் நல காவல் அலுவர்களுக்கான அறிவுரைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்களை சந்தித்து அவர்களின் தற்போதைய நிலை குறித்தும், அவர்களின் கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகள் அல்லது அவர்களுக்கான வேலை வாய்ப்பு சம்பந்தமான தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்களை கையாள்வது குறித்தும் மாவட்ட எஸ்.பி. எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தூத்துக்குடி குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை ஏ.டி.எஸ்.பி. தீபு உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.






