வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்: பீகாரைப் போல் தமிழகத்திலும் புயலை கிளப்புமா?

பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தபோது, லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை இழந்தனர்.
சென்னை,
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.
ஏற்கனவே, பீகார் மாநிலத்தில் நடந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தபோது, லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை இழந்தனர். எனவே, தமிழகத்திலும் இந்தப் பணிகள் நடக்கும்போது அதிகப்படியான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டபோதே எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசியல் கட்சிகள், சொந்த மாநிலத்திலேயே அதுபோல் நடந்தால் சும்மா விட்டுவிடுவார்களா என்ன?. அவர்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.
முதலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துகளை கேட்க வேண்டும். அந்த வகையில், தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்), வாக்குப்பதிவு அதிகாரி ஆகியோர் 3 விதமாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவார்கள். அந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்துவது தொடர்பான பணிகள் எந்த வகையில் மேற்கொள்ளப்படும் என்பது தெரிவிக்கப்படும்.
இதையடுத்து, வீடு வீடாக சென்று வாக்காளர்கள் சரி பார்க்கும் பணி தொடங்கும். 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதுமானது. இந்த ஆண்டு வெளியான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்கள் ஆதார் கார்டு உள்பட ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி பெயர் சேர்ப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 20 ஆண்டுகளில் வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் பற்றியும் ஆய்வு செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில், சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. அதேபோல், இறந்துபோனவர்களின் பெயர்களும் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி, 2 இடங்களில் பெயர் இருப்பதாக கருதப்படும் சுமார் 50 லட்சம் வாக்காளர்களின் பெயர்களும், இறந்த வாக்காளர்களின் பெயர்களும் கண்டுபிடித்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. முதல் தலைமுறை வாக்காளராக இருந்தால், அவர்கள் தங்களுடைய பெற்றோரிடம் இருக்கும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மாதத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறைவு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது எவ்வளவு பெயர் நீக்கப்பட்டது என்ற விவரமும் வெளிவரும். பீகாரைப் போல் தமிழகத்திலும் புயலை கிளப்புமா? என்பது அப்போது தெரியவரும்.






