சென்னையில் வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்


சென்னையில் வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்
x

செல்லப்பிராணிகளின் உரிமத்தை பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, விதிகள் 2023, பிரிவு 292ன் படி பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (ஆன்லைன் போர்டல்) மேயரால் 03.10.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு:

1. முதற்கட்டமாக செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற அதன் உரிமையாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து பின்னர் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணியின் புகைப்படம் உள்ளிட்ட பிற விவரங்களை பதிவேற்றம் செய்து ரூ.50/- கட்டணம் செலுத்த வேண்டும்.

2. இவ்வாறு பதிவு செய்யும் பொழுது தங்களுடைய கால்நடை மருத்துவமனையையும் கால்நடை மருத்துவரையும் தேர்வு செய்வது மிக அவசியம்.

3. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக உரிமையாளர் பதிவின் போது தாங்கள் தேர்ந்தெடுத்த கால்நடை மருத்துவமனையையோ அல்லது கால்நடை மருத்துவரையோ நாடி வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் மைக்ரோசிப் பொறுத்த வேண்டும்.

4. வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் மைக்ரோசிப் பொறுத்தப்பட்ட விவரங்களை தங்களுடைய பதிவுபெற்ற கால்நடை மருத்துவர் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

5. மூன்றாம் கட்டமாக இத்தரவுகள் மண்டல கால்நடை மருத்துவ அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட பின்னர், செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படும்.

6. இறுதி கட்டமாக செல்லப்பிராணியின் உரிமையாளர் தங்களுடைய செல்லப்பிராணி உரிமையாளர் பதிவு வலைதளத்தில் சென்று செல்லப்பிராணி உரிமையாளர் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட முறையினை, செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் எளிதில் பயன்படும் வகையில் மைக்ரோ சிப்பிங் பொருத்தும் பணி மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தும் பணி பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் கீழ்கண்ட

6 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களில் 08.10.2025 அன்று முதல் இலவசமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது..

1. திரு.வி.க. நகர் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-6

2. புளியந்தோப்பு செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-6

3. லாயிட்ஸ்காலனி செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-9

4. நுங்கம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-9

5. கண்ணம்மாப்பேட்டை செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-10

6. மீனம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-12

மேலும் செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் எளிதில் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் 09.11.2025, 16.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய தேதிகளில் மேற்கண்ட மையங்களிலும், தென்சென்னையில் சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுபாட்டு மையத்திலும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் 23.11.2025க்குள் தங்களது செல்லப்பிராணிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெறுவது கட்டாயம் என்பதால் இந்த சிறப்பு முகாம்களையும், 6 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களையும் முழுமையாக பயன்படுத்தி கொண்டு தங்கள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று அபராதம் செலுத்துவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story