தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அடுத்த வாரம் துவக்கம் - தேர்தல் ஆணையம்


தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அடுத்த வாரம் துவக்கம் - தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 24 Oct 2025 1:10 PM IST (Updated: 24 Oct 2025 1:12 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது

சென்னை

பீகாரில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதில், பீகாரில் 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்பதாகவும். அதனால் மேற்கண்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின்போது பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே, சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்த தகவலை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அடுத்த வாரம் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story