அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை  நிரப்ப நடவடிக்கை :  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 July 2025 12:12 PM IST (Updated: 10 July 2025 1:11 PM IST)
t-max-icont-min-icon

உதவிப் பேராசிரியர்களை கூடுதல் பணி செய்ய அனுப்பும் ஆணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாநிலக் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளை நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததால், சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள் 7 பேரை மாநிலக் கல்லூரியில் கூடுதல் பணி செய்யும்படி கல்லூரிக் கல்வி ஆணையர் ஆணையிட்டுள்ளார். அதைக் கண்டித்து திறந்த நிலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் மூன்றாவது நாளாக இன்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் தமிழக அரசின் பொறுப்பற்ற செயல்பாடுகள் தான்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மொத்தம் 32 துறைகள் உள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி அவற்றில் குறைந்தது 105 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், அங்கு வெறும் 37 பேர் மட்டும் தான் பணியாற்றுகின்றனர். அதனால், அங்கு பெரும்பாலான துறைகள் ஒற்றை ஆசிரியர் துறைகளாக உள்ளன. அவர்களிலும் 7 பேரை மாநிலக் கல்லூரிகளுக்கு கூடுதல் பணியாற்றச் சொல்வது எந்த வகையிலும் நியாயமல்ல. அது பல்கலைக்கழக ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரிப்பதுடன் கல்வித்தரத்தையும் வெகுவாக பாதிக்கும்.

மாநிலக் கல்லூரியில் நடப்பாண்டில் 44 புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்துள்ள தமிழக அரசு, அவற்றை நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததால் தான், பல்கலைக்கழக ஆசிரியர்களை கூடுதல் பணியாற்ற அனுப்புகிறது. அது தான் சிக்கலுக்குக் காரணம். ஒருபுறம் வழக்கமான பாடங்களை நடத்துவதற்கே கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. அனைத்துக் கல்லூரிகளிலும் சேர்த்து 9 ஆயிரத்திற்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான புதிய பாடப்பிரிவுகளை தொடங்கி விட்டதாக பெருமை பேசும் நோக்குடன், தமிழ்நாட்டில் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் நடப்பாண்டில் தொடங்கியுள்ள திமுக அரசு, அந்தப் படிப்புகளை நடத்துவதற்காக 252 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமிக்க ஆணையிட்டுள்ளது, கல்லூரிகள் தொடங்கி 10 நாள்களுக்கும் மேலாகி விட்ட நிலையில், அவர்களும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

தமிழக அரசால் முடிந்தால் போதிய அளவு ஆசிரியர்களை நியமித்துவிட்டு, அதன் பிறகு புதிய பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும். ஆனால், ஆசிரியர்களும், இல்லாமல் கட்டமைப்பும் இல்லாமல் பள்ளிக் கட்ட்டங்களில் கல்லூரிகளைத் தொடங்குவது, வகுப்பறைகள் கூட இல்லாமல் புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்குவது என வெறுங்கைளால் முழம் போடும் நாடகங்களைத் தான் திமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய நாடகங்களால் மக்களையும், மாணவர்களையும் நீண்ட நாள்களுக்கு ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

சென்னை மாநிலக் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகளை நடத்துவதற்காக திறந்தநிலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களை கூடுதல் பணி செய்ய அனுப்பும் ஆணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story