ராமேசுவரம் கடலில் நிறுத்தப்பட்டுள்ள 3 கொல்கத்தா கப்பல்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

ராமேசுவரம் கடலில் நிறுத்தப்பட்டுள்ள 3 கொல்கத்தா கப்பல்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்ல கொல்கத்தாவில் இருந்து 3 சரக்கு கப்பல்கள் பாம்பன் பகுதிக்கு வந்தன. ஆனால் புதிய ரெயில் பாலம் செயல்பாட்டுக்கு வராததால் தூக்குப்பாலம் திறக்கப்படாது என்ற தகவல் கிடைத்த பின்னர், அந்த 3 கப்பல்களும் கடந்த 2 நாட்களாக ராமேசுவரம் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
தனுஷ்கோடி கடல் வழியாக கடந்து செல்லலாமா? என்று அந்த கப்பல் மாலுமிகள் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ராமேசுவரம் கடல் பகுதியில் 3 கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது குறித்து தினத்தந்தியில் நேற்று படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து ராமேசுவரம் கடலில் நிறுத்தி இருக்கும் 3 கப்பல்களுக்கு சென்று இந்திய கடற்படை மற்றும் கடலோர போலீசார் ஆய்வு செய்தனர்.
கப்பல்களில் மாலுமிகள் உள்பட மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்? என்பது குறித்தும் விசாரணை செய்தனர். ராமேசுவரம் துறைமுக அதிகாரிகள் அனுமதி இல்லாமல் இந்த கடல் பகுதியில் கப்பல்களை நிறுத்தக்கூடாது என்றும் உடனடியாக கப்பல்களை இங்கிருந்து திரும்ப கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தினர்.
தற்போது பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக இருப்பதால், கடல் சீற்றம் குறைந்த பின்னர் கப்பல்களை இங்கிருந்து கொண்டு செல்வதாக கப்பல் மாலுமிகள் கூறியதாக கூறப்படுகிறது.






