சென்னை மாநகரில் ரூ.10.85 கோடியில் தெரு மின்விளக்குகள் அமைப்பு

மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 123 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் ரூ.10.85 கோடி மதிப்பீட்டில் அதிக வெளிச்சம் தரும் வகையிலான 2,782 தெரு மின்விளக்குகள், 9 உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் 1,476 மின் விளக்கு கம்பங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி, தெருவிளக்குகள் அமைக்கப்படாத இடங்கள் மற்றும் அதிக வெளிச்சம் தேவைப்படும் இடங்கள் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ரூ.10.85 கோடி மதிப்பீட்டில் 123 எண்ணிக்கையான குடியிருப்புப் பகுதிகளில் மொத்தம் 1,476 எண்ணிக்கையிலான விளக்கு கம்பங்கள், 9 எண்ணிக்கையிலான உயர் கோபுர மின்விளக்குகள் மற்றும் 2,782 எண்ணிக்கையிலான எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளில் 48 எண்ணிக்கையிலான நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதியில் 964 எண்ணிக்கையிலான மின்விளக்கு கம்பங்கள், 7 எண்ணிக்கையிலான உயர் கோபுர விளக்குகள் மற்றும் 1,651 எண்ணிக்கையிலான எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிகள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மீதமுள்ள 75 குடியிருப்புப் பகுதிகளில் 512 எண்ணிக்கையிலான மின்விளக்கு கம்பங்கள், 2 எண்ணிக்கையிலான உயர் கோபுர விளக்குகள் மற்றும் 1,131 எண்ணிக்கையிலான எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






