நடத்தையில் சந்தேகம்: பெண்ணை 11 முறை கத்தியால் குத்தி கொலை செய்த 2-வது கணவர்


நடத்தையில் சந்தேகம்: பெண்ணை 11 முறை கத்தியால் குத்தி கொலை செய்த 2-வது கணவர்
x
தினத்தந்தி 23 Sept 2025 4:23 PM IST (Updated: 23 Sept 2025 7:13 PM IST)
t-max-icont-min-icon

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டனா டவுன் பகுதியை 5 சேர்ந்தவர் ரேகா (வயது 30). - இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவருக்கும் இவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ரேகா, தனது கணவரை பிரிந்தார். மேலும் ஹாசன் டவுனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

அப்போது அதே நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த லோகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. லோகேசும் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து இருந்தார். இந்த நிலையில் ரேகாவுக்கும், லோகேசுக்குமான பழக்கம் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தனது கணவர் லோகேஷ் மற்றும் முதல் கணவருக்கு பிறந்த 2 குழந்தைகளுடன் ரேகா பெங்களூருவில் குடியேறினார்.

பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுங்கதகட்டே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரேகா வேலைக்கு சேர்ந்தார். அதே நிறுவனத்தில் லோகேசையும் டிரைவராக வேலைக்கு சேர்த்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரேகாவுக்கும், அவரது கணவர் லோகேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. ரேகாவுக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் லோகேஷ் தகராறு செய்து வந்தார்.

நேற்று காலையில் இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்ட ரேகா, சுங்கதகட்டே பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது அங்கு கத்தியுடன் வந்த லோகேஷ், ரேகாவை 11 முறை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த ரேகா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து லோகேஷ் அங்கிருந்து ஓடிவிட்டார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ரேகாவை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரேகா பரிதாபமாக இறந்தார். இது பற்றி காமாட்சிபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லோகேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story