கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.20 வழங்க நடவடிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக முதல்-அமைச்சர் அவசரமாக தலையிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒப்பந்த முறையில் கறி கோழிகளை வளர்த்து வரும் விவசாயிகளுக்கு வளர்ப்பு கூலியை கிலோ ஒன்றுக்கு ரூ.20 என உயர்த்தி வழங்கிட வேண்டுமென கடந்த பல மாதங்களாக தமிழ்நாட்டில் இவ்விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நடந்த இவ்விவசாயிகளின் போராட்டத்தின் போது, ஒரு வாரத்தில் முத்தரப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். அதில் பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் கால்நடை துறை உயர் அலுவலர்கள் உறுதி அளித்ததை நிறைவேற்றாத நிலையில் தான் விவசாயிகளின் போராட்டம் உழவர் திருநாளுக்கு முன் தீவிரமானது.
இந்த நிலையிலும் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய உழவர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 9 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்ததை அன்றைக்கே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இது தவறான நடவடிக்கை என கூறி, உடனடியாக அவர்களை விடுதலை செய்வதுடன், பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி இருந்தோம்.
ஆனால் ஒரு வாரம் கடந்தும் இவர்களை விடுதலை செய்யாதது மட்டுமல்ல, வளர்ப்பு கூலியை உயர்த்துவதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காது, குஞ்சு உற்பத்தி கம்பெனிகளின் முதலாளிகளுக்கு ஆதரவு நிலையில், உயர் அலுவலர்கள் இவ்விவசாயிகளிடம் அலட்சியம் காட்டிய நிலையில் தான் மீண்டும் ஆயிரகணக்கான கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் போராட்டம் சென்னை கால்நடைத்துறை அலுவலகம் முன்பு தீவிரமாக நடந்து வருகிறது.
கிலோ ஒன்றுக்கு ரூ.6.50 மட்டுமே கடந்த ஐந்தாண்டுகளாக வழங்கப்படுகிறது. ஆனால் வளர்ப்புக்கான செலவுகள் பல மடங்குகள் கூடியிருக்கிற நிலையில், இதன் நியாயத்தை உணராது, விவசாயிகளைப் பற்றி கவலைப்படாது, குஞ்சு உற்பத்தி அதிபர்களுக்கு ஆதரவாக கால்நடைத்துறை செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இந்த நிலையிலும் அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல.
எனவே தமிழக முதல்-அமைச்சர் அவர்கள் அவசரமாக தலையிட்டு, உடனடியாக முத்தரப்பு கூட்டத்தை நடத்தி ஒப்பந்த முறையில் கோழி வளர்ப்பு செய்யும் விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு கூலியாக 20 ரூபாய் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






