திமுக அரசின் அலட்சியத்தால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு: நயினார் நாகேந்திரன்

திமுகவின்அரசியலுக்கு காவல்துறையினர் எப்படி ஆதரவளிக்கிறார்கள் என்பதை தமிழகம் கவனித்துக் கொண்டு இருக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கடந்த 27 ஆம் தேதி திருத்தணி இரயில் நிலையம் அருகே கஞ்சா சிறுவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் மாயமாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறைக்கு குற்றங்களைத் தடுக்கவும் திராணியில்லை, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் துப்பில்லை என்பதற்கான மற்றொரு சான்று இது.
கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானவரை அரசு மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க முடியாதளவிற்குத் தமிழகக் காவல்துறை வலுவிழந்துவிட்டதா? அல்லது அந்த இளைஞர் பிழைத்து வந்தால் அரசியல் ரீதியாக சிக்கல்கள் உருவாகும் என நினைத்துத் திட்டமிட்டே அவரை அரசு தொலைத்துவிட்டதா? உண்மையில் அந்த இளைஞர் காணாமல் போனாரா அல்லது மக்களை மடைமாற்ற கொலை செய்யப்பட்டாரா? போன்ற சந்தேகங்கள் மக்கள் மனதில் வலுக்கத் துவங்கிவிட்டன.
காரணம், பிழைப்பிற்காக எல்லைதாண்டி தமிழகத்தில் தஞ்சம் புகும் வடமாநிலத்தவரின் மீது திமுக தலைவர்கள் எந்தளவிற்கு வன்மத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், திமுகவின் பிளவுவாத அரசியலுக்குக் கண்மூடித்தனமாகக் காவல்துறையினர் எப்படி ஆதரவளிக்கிறார்கள் என்பதையும் தமிழகம் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது.
எனவே, பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் காணாமல் போனதன் உண்மை பின்னணி என்ன என்பதை முதல்-அமைச்சர் உடனடியாக மக்களிடம் விளக்கிக் கூற வேண்டும். இல்லையேல் திமுக அரசின் அலட்சியத்தால் இந்திய அளவில் நமது தமிழகம் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்படுவோம். என தெரிவித்துள்ளார்.






