தென்காசி: தோரணமலை முருகன் கோவிலில் கடைசிவெள்ளி பூஜை

கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஐப்பசி மாத கடைசிவெள்ளி பூஜையையொட்டி 21 பக்தர்கள் மலையேறி அங்குள்ள சுனையில் இருந்து குடங்களில் புனித நீர் கொண்டுவந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட பழமையும் பெருமையும் உடையதாகும்.
ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி அன்று மலை மீது உள்ள சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல இன்று ஐப்பசி மாத கடைசி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது.
இதற்காக 21 பக்தர்கள் மலையேறி அங்குள்ள சுனையில் இருந்து குடங்களில் புனித நீர் கொண்டுவந்தனர். அதனுடன் அடிவாரத்தில் பிள்ளையார் கோவிலில் வழிபட்டனர். பின்னர் அந்த புனிதநீர் மூலம் உற்சவர்கள் முருகன், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதோடு பால், பஞ்சாமிர்தம், விபூதி போன்ற பொருட்களாலும் அபிஷேகம் நடந்தது.
பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. விவசாயம் செழிக்க வருணகலச பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.






