தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு வழங்கிய போனஸ் தொகையை நடப்பு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துவிட்டதாகக் கூறி தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்க எதிர்ப்பு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

சென்னை மாநகராட்சி தொடங்கி, கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்குவதும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாகி வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, கோவிட் பெருந்தொற்று காலம் தொடங்கி மழை, வெள்ளம், புயல் என அத்துனை இயற்கை பேரிடர்களையும் எதிர்கொண்டு நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், மக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பணியிலும் அயராது பாடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நீண்டகால கோரிக்கையான பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com