காலிப்பணியிடங்களை நிரப்புவதில் மட்டுமல்ல, குறிப்பிடுவதிலும் அக்கறையில்லாத திமுக அரசு - நயினார் நாகேந்திரன்

கண் துடைப்புக்காக ஒரு அறிக்கையைத் திமுக அரசு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு அட்டவணையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைக் கூட குறிப்பிடாமல் கண் துடைப்புக்காக ஒரு அறிக்கையைத் திமுக அரசு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வுகளை முறையாக நடத்துவதில்லை, 2011-க்கு முன்னர் பணியில் இணைந்த ஆசிரியர்களுக்குச் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தவில்லை, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்குவதில்லை, பகுதி நேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்வதில்லை என நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்கள் நலனை வதைத்த திமுக அரசு, ஆட்சி முடியும் தருவாயில், ஒரு படி மேலே சென்று தேர்வு அட்டவணையை வெளியிடுவதிலேயே மெத்தனமாக செயல்பட்டுள்ளது.
கல்வித்துறையின் அச்சாணியான ஆசிரியப் பணியிடங்களை நிரப்புவதில் அக்கறையின்றி செயல்பட்டு, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை கல்வியில் சீரழிந்த தமிழ்நாடாக மாற்றிவரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






