விவசாய வளர்ச்சியை படுபாதாளத்தில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனை - எடப்பாடி பழனிசாமி


விவசாய வளர்ச்சியை படுபாதாளத்தில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனை - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 23 Oct 2025 2:15 AM IST (Updated: 23 Oct 2025 2:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ள அரசாக தான் இன்றைய விடியா திமுக அரசு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் தஞ்சையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த உடன் தஞ்சை விரைந்தேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்ததுடன், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டேன்.

"திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே உள்ள நெல் மூட்டைகளை, குடோனுக்கு எடுத்து செல்லாததால், புதிய கொள்முதல்களை வைக்க இடமில்லை" என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனை சட்டப்பேரவையில் நான் குறிப்பிட்டால், அதனை மறுத்த திமுக அரசின் உணவுத்துறை அமைச்சர், தாங்கள் வேகமாக, துரிதமாக செயல்படுவதாக குறிப்பிட்டார். ஒரு நாளுக்கு 2,000 மூட்டைகள் எடை போடப்படுவதாகவும் கூறினார்.

ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுசெய்த போது, அங்கு இருக்கும் லோடுமேன், ஒரு நாளுக்கு வெறும் 800-900 மூட்டைகள் தான் எடை போடப்படுவதாக சொல்கிறார்.

திமுக அமைச்சர் தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது விவசாயத்திற்கு விரோதமான செயல். அஇஅதிமுக ஆட்சியில், ஒரு நாளுக்கு 1,000 நெல் மூட்டைகள் எடை போடப்பட்டன.

இரவு பகலெனப் பாராமல் 100 நாட்கள் போராடி விளைவித்த நெற்பயிர்களை இந்த திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு இருக்கிறது?

செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும், அதனை நான் கேட்டுப் பெறவேண்டும் எனவும் உணவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் சொன்னார். ஆனால், கடந்த 18.08.2025 அன்றே மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. இது கூடத் தெரியாமல், சட்டமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளார் திமுக அரசின் அமைச்சர்.

தான் போட்ட நகையை அடமானம் வைத்து விளைவித்த நெற்பயிரை 20 நாட்களாகக் கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்து, தற்போது மழையில் நனைந்து முளைத்துப் போனதால் என்ன செய்வதென தெரியாமல் கண்ணீருடன் என்னிடம் பெண் விவசாயி ஒருவர் கண்ணீர் விட்டு கதறியது, கலங்கச் செய்தது. இது ஒரு கொடுமையான செயல்.

அதிமுக ஆட்சியில் 2020-21 காலத்தில் 4.5 சதவீதம் ஆக இருந்த விவசாய வளர்ச்சியை, 2024-25 காலத்தில் 0.09 சதவீதம் ஆக படுபாதாளத்தில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனை. விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ள அரசாக தான் இன்றைய விடியா திமுக அரசு இருக்கிறது.

விவசாயிகளுடன் எப்போதும் துணை நிற்பது போல், இந்த கடினமான நேரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களோடு துணைநிற்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story