ஒருதலை காதலால் விபரீதம்.. காதலனை பழிவாங்க நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐ.டி. பெண் ஊழியர்

தனது காதலை ஏற்காத சக ஊழியரை பழி வாங்குவதற்கு இதனைச் செய்ததாக சென்னை ஐ.டி. பெண் ஊழியர் வாக்குமூலம் அளித்தார்.
ஆமதாபாத்,
நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் சிக்கினார். தனது காதலை ஏற்காத சக ஊழியரை பழி வாங்குவதற்கு இதனைச் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக குஜராத் மாநிலத்திற்கு கடந்த மாதத்தில், தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டே இருந்தது. அதுவும் குறிப்பாக ஆமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருந்தது. நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு மட்டும் 13 முறை இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. அதோடு ஆமதாபாத்தில் உள்ள ஜெனீவா லிபரல் பள்ளிக்கு நான்கு முறையும், திவ்ய ஜோதி பள்ளிக்கு மூன்று முறையும், பி.ஜெ.மருத்துவ கல்லூரிக்கு ஒரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது.
இதனால் அனைத்து போலீஸாரும் ஒருங்கிணைந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். பெரும்பாலான கொலை மிரட்டல்கள் போலி இ-மெயில் ஐ.டியில் இருந்து வந்திருந்தது. அதோடு தனது அடையாளத்தை மறைக்க டார்க் வெப் பயன்படுத்தப்பட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
ஆமதாபாத்தில் பி.ஜெ.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் ஏர் இந்தியா விமானம் மோதி விபத்துக்குள்ளான பிறகும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. அதில், இப்போது எங்களது திறமையை உணர்ந்திருப்பீர்கள். உங்களுக்கு நேற்று அனுப்பிய இ-மெயிலை தொடர்ந்து குஜராத் முன்னாள் முதல்-மந்திரியுடன் விமானம் விபத்துக்குள்ளானது. "இப்போது தெரிந்திருக்கும் நாங்கள் விளையாடவில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மெயில் மிரட்டலை தொடர்ந்து குஜராத் சைபர் பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் சென்னையை சேர்ந்தஐ.டி.பெண் ஊழியர் என்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஆகமதாபாத் குற்றப்பிரிவு இணை கமிஷனர் சரத் சிங்கால் கூறுகையில், "தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சென்னையை சேர்ந்த ரெனே ஜோஷில்டா என்ற பெண் இன்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் போலி இ-மெயில் முகவரிகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தார். அவர் திவிஜ் பிரபாகர் என்பவரை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் பிரபாகர் கடந்த பிப்ரவரி மாதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அவரைப் பழிவாங்க அவரது பெயரை பயன்படுத்தி அவரை இதில் சிக்க வைக்கவேண்டும் என்பதற்காக போலி இ-மெயில் ஐ.டி, டார்க் வெப் போன்றவற்றை பயன்படுத்தி தனது அடையாளத்தை மறைத்து ஜோஷில்டா வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தார்.
அவர் ரோபோ செய்வதில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கன்சல்டண்டாக இருக்கிறார். பிரபாகர் மீதான கண்மூடித்தனமாக காதல் காரணமாக தனது தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்தி நரேந்திர மோடி ஸ்டேடியம், இரண்டு பள்ளி, மருத்துவ கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.
குஜராத் மட்டுமல்லாது மராட்டிய மாநிலம் உள்பட 11 மாநிலங்களுக்கும் அவர் 21 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். அவர் எவ்வளவுதான் தனது அடையாளத்தை மறைக்க முன்னெச்சரிக்கையுடன் வேலை செய்தாலும், அவர் செய்த ஒரு சிறிய தவறு மூலம் அவரது அடையாளத்தை கண்டுபிடித்து அவரை கண்காணித்து கைது செய்தோம். அவரிடமிருந்து டிஜிட்டல் மற்றும் பேப்பர் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
காதலனைப் பழி வாங்க நினைத்த சென்னையை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.






