தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியது

2-ந் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை ஆகும். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இந்த மாதத்துடன் (டிசம்பர்) பருவமழை நிறைவு பெற உள்ளது. இந்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில் வடகிழக்கு பருவ மழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டில் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக பெய்தது. 'தித்வா' புயல் காரணமாக டெல்டா, வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னையில் பரவலாக மழை பெய்தது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழையில் கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு சராசரி 43.7 செ.மீ. ஆகும். இதில் 42.8 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. இன்னும் ஒரிரு தினங்கள் இருப்பதால் மழைக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வானிலையில் சற்று மாற்றம் அடைகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தென் கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வருகிற 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 2-ந் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






