தி.மு.க.வை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே… விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் துவங்க முடியும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
காஞ்சிபுரம்,
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இன்று மக்களை சந்திக்கிறார். முதலில் காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், “பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் புனிதமான பூமி. அ.தி.மு.க. என்பதே அண்ணாவின் பெயரையும், கொடியில் அண்ணாவின் உருவத்தையும் கொண்டது. இந்த புனித பூமியில் பேசுவதே என் பாக்கியம். காஞ்சிபுரமே குலுங்கும் அளவுக்கு கடல்போல் காட்சியளிக்கிறது. அடுத்தாண்டு அ.தி.மு.க.வின் வெற்றிக்கு இங்கிருக்கும் மக்களின் ஆரவாரமே சாட்சி.
அ.தி.மு.க. மக்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்ட இயக்கம். தீயசக்தி தி.மு.க.வை வீழ்த்த இந்த கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் எண்ணத்தை நிகழ்த்திக்காட்டியவர் எம்.ஜி.ஆர்.. அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா மறைந்தாலும் மக்கள் மனதில் பூமி உள்ளவரை நிலைத்து நிற்பார்கள். எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியவர்கள்.
யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் துவங்க முடியும். சிலர், அ.தி.மு.க. யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள், பாவம் அறியாமையில் பேசுகிறார்கள். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்.?
இங்கிருக்கும் அவ்வளவு பேரும் அ.தி.மு.க. தொண்டர்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசிவருகிறார்கள். அ.தி.மு.க. அப்படியல்ல, ஏழை ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திட்டங்களைத் தீட்டி அதன்மூலம் ஏற்றம் பெற்ற கட்சி. மரம் உடனே வளராது, செடி வைத்து தண்ணீர் ஊற்றி பின்னர் தான் பூப்பூத்து காய்காய்க்கும். அப்படித்தான் ஒரு இயக்கமும், எடுத்தவுடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது,
எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி தொடங்கி 5 ஆண்டுகாலம் தன்னுடைய உழைப்பைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார், அம்மாவும் அப்படித்தான் எடுத்தவுடன் முதல்வர் ஆகவில்லை, மக்களுக்கு உழைத்துதான் முதல்வரானார். பேறறிஞர் அண்ணா அவர்கள் எடுத்தவுடனே முதல்வர் ஆகவில்லை., நிறைய போராட்டங்களை சந்தித்தார், மொழிக்காக சிறை சென்றார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு தன்னையே அர்ப்பணித்தார். நம் தலைவர்கள் எல்லாம் அர்ப்பணித்து வாழ்ந்து அ.தி.மு.க.வை அடையாளம் காட்டிச் சென்றனர். அதனால்தான் அ.தி.மு.க. நிறைய திட்டங்களைக் கொடுத்தது. தமிழகம் இந்தளவு உயர்ந்திருப்பதற்கு 31 ஆண்டுகள் மக்களுக்காக நாட்டுக்காக அ.தி.மு.க. உழைத்ததுதான் காரணம்.
அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொடுத்திருக்கிறோம். கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார் அம்மா, அதிக நிதி ஒதுக்கினார். அ.தி.மு.க. ஆட்சியில்தான் நிறைய கல்லூரிகளைக் கொண்டுவந்து கல்வியை உயர்த்தினோம். 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்தோம். 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல், வேளாண், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என நிறைய கல்லூரிகளைத் திறந்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு.
ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க அடித்தளமிட்டது அ.தி.மு.க. அரசு. அது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமாலய சாதனை படைத்தது போல பேசுறாங்க, நாங்க அப்படியல்ல, இங்கிருப்பவர்கள் உழைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்கள், உழைப்புதான் நிலைக்கும். தொழிலிலும், அரசியலிலும் உழைத்தால்தான் ஏற்றம் பெற முடியும், அதுவும் அ.தி.மு.க.வில் மட்டும்தான், வேறு எந்தக் கட்சியிலும் வரமுடியாது.
மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்துதான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசி வருகிறார்கள். யாரென்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நான் உங்கள் முன் பேசுகிறேன் என்றால் எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டு காலம். 1976ல் கிளைக்கழகச் செயலாளராக பொறுப்பேற்றேன் அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து உங்கள் முன் நிற்கிறேன், இது உழைப்பால் நிற்கிறேன். சிலர் உழைப்பே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள். அது நிலைக்காது. ஏனெனில், உழைப்புதான் நிரந்தரம்.
தி.மு.க.வை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே. தமிழகத்தில் அதிக உறுப்பினர் கொண்ட இயக்கம் அ.தி.மு.க.. தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அ.தி.மு.க. அரசு. பொன்விழா கண்ட கட்சி. ஆக அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.
அ.தி.மு.க.வில் எங்களுக்கு அடையாளம் என்றால் உழைப்பு, சேவை, விஸ்வாசம். மற்றவர்களைப் போல திரைப்படங்களில் நடித்து அதன்மூலம் வருமானத்தைப் பெற்று, ஓய்வுபெறும் காலத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலை கிடையாது. இளமைப் பருவத்திலே எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு 51 ஆண்டுகாலம் அ.தி.மு.க.வுக்காக பாடுபட்டு படிப்படியாக வந்து பொதுச்செயலாளராக ஆனேன், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அடுத்து உங்களால் முதல்வர் ஆக்கப்பட்டேன். இதற்கு ஒரே அடையாளம் உழைப்பு, விஸ்வாசம், சேவை. இதற்குக் கிடைத்ததுதான் பொதுச்செயலாளர், முதல்வர் பதவி.
ஒரு திரைப்படத்தில் நடித்தவுடனே ஹீரோ ஆகமுடியாது, பல படத்தில் நடித்த பிறகே ஸ்டார் ஆக முடியும். சினிமாவிலே அப்படி என்றால் அரசியலில் எப்படியிருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். அ.தி.மு.க.வில் நான் இருந்ததால்தான் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இது சிலருக்குப் பொறுக்கவில்லை. எடுத்தவுடனே எல்லாம் கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். சேவை செய்தால்தான் நிரந்தரமாக இருக்கும், நிலைக்கும் என்றார்.
இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அவர்கள் சாதித்தது என்ன? எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. எம்.ஜி.ஆர்., அண்ணா, அம்மா எல்லோரும் எடுத்ததுமே முதல்வர் ஆகவில்லை. மக்கள் நன்மதிப்பை பெற்ற பின்னர்தான் முதல்வராக வர முடிந்தது என்றும் கூறினார்.






