தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது - கமல்ஹாசன் பாராட்டு

தமிழக அரசின் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மத்திய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில், கல்வி வளர்ச்சிக்கு வழங்கும் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த நிலையில் தமிழக அரசின் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது என்று மாநிலங்களவை எம்.பி.யும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வசதி படைத்தவர்களுக்குக் கிடைப்பதை விட தரமான கல்வி எளிய பின்புலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டுமெனும் நல்லெண்ணத்துடனும், மாறிவரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது. குறிப்பாக மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தி வைக்கும் தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பதும், அநீதியான நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக்கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை.

அனைவருக்கும் தரமான கல்வி எனும் இலக்கோடு செயலாற்றி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்த டெல்லி ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையிலான குழுவினரையும் மனமாரப் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com