காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்

காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.
சென்னை,
கிராமப்புற வேலைவாய்ப்புக்காக கடந்த 2005-ம் ஆண்டு, ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்’ கொண்டுவரப்பட்டது. அதில், தகுதியுள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை அளிக்கப்படுகிறது. இது, 100 நாள் வேலைத்திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதற்கிடையே, இத்திட்டத்தை நீக்கிவிட்டு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையுடன் கிராமப்புற வேலைவாய்ப்பை பிணைக்கும்வகையில், வேலைவாய்ப்புக்கான வளர்ச்சியடைந்த பாரத உத்தரவாத திட்டம் கொண்டுவரப்படுகிறது.
இதற்கான மசோதா, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்தில், வேலை நாட்கள் எண்ணிக்கை 100-ல் இருந்து 125 ஆக உயர்த்தப்படுகிறது. மகாத்மா காந்தி பெயரும் நீக்கப்பட்டு விக்சித் பாரத் ரோஜ்கர்-அஜீவிகா மிஷன் (கிராமின்) என மாற்றப்படுகிறது. இந்த மசோதா குறித்து மத்திய வேளாண்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பதில் அளிக்கிறார்.
இந்த நிலையில், இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
காந்தியாரின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழ்நாடு அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் நாம் முயற்சி செய்ய வேண்டும். பாய்ண்ட்-ஐ விட்டுவிட்டு வேறு இடத்தில் விளையாடக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக மந்திரிகளின் தமிழகம் வருகை அவர்களுக்கு சாதகமாக அமையுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “அதை நான் எப்படி சொல்ல முடியும்; மக்கள் தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து 2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு “கண்டிப்பாக பிரசாரம் செய்வேன்” என்று கூறினார்.






