மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தவெகவினர் பேனர்கள் வைக்கக் கூடாது - புஸ்ஸி ஆனந்த்


மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தவெகவினர் பேனர்கள் வைக்கக் கூடாது  - புஸ்ஸி ஆனந்த்
x

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கட்சி சார்பில் வைக்கப்படவில்லை என்று புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

சென்னை,

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் அன்புக் கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன், மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை. நம் வெற்றித் தலைவர் அவர்களும் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை. எனவே, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக் கூடாது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து, கழக வழக்கறிஞர்கள் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story