திருவாரூர்: ரூ.72 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூ.172 கோடியே 18 இலட்சம் மதிப்பீட்டிலான 2,423 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
திருவாரூர்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 73 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 1,234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், திருவாரூர் மாவட்டத்தின் புதிய ஊராட்சி மன்ற அலுவலகங்கள், பொது விநியோகக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், கோ-லொகேஷன் சென்டர், பள்ளிக் கட்டடங்கள், பொது நூலகக் கட்டடங்கள், பேருந்து நிழற்குடைகள், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், நேரடி கொள்முதல் நிலையங்கள், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் என மொத்தம் 42 கோடியே 8 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் 1209 முடிவுற்ற பணிகள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 9 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம், மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் செலவில் சீமாங்க் கட்டடம், ஆதிச்சபுரத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் பொது சுகாதார அலகு கட்டடம், பெரும்புகலூரில் 20 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையம், கூத்தாநல்லூரில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கடுவங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 52 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கலை பண்பாட்டு அறை, ஆய்வகம் மற்றும் நூலகம் கட்டடங்கள், பொது நூலகத் துறை சார்பில் உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை மற்றும் எடையூர் ஆகிய இடங்களில் 66 இலட்சம் ரூபாய் செலவில் கிளை நூலகங்கள். நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நன்னிலம் பேரூராட்சி, மணவாளன்பேட்டையில் 19 இலட்சம் ரூபாய் செலவில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கொற்கை கால்நடை பண்ணையில் 1 கோடியே 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் வற்றுப் பசுக்களுக்கான வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கொட்டகை, 1 கோடியே 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கறவைப் பசுக்கள் மற்றும் கன்றுகளுக்கான கான்கிரீட் கொட்டகை, 25 இலட்சம் ரூபாய் செலவில் பண்ணை மேலாளர் அலுவலகக் கட்டடம், 30 இலட்சம் ரூபாய் செலவில் கறவைப் பசுக்களுக்கான கொட்டகை.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருவாரூர், உதயமார்த்தாண்டபுரம், கட்டிமேடு, எடையூர் ஆகிய இடங்களில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் விதைக் கிடங்குகள், திருவாரூரில் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அரசு வேளாண் கருவிகள் மற்றும் பணிமனை அலுவலகக் கட்டடம், குடவாசல் மற்றும் கொரடாச்சேரி ஆகிய இடங்களில் 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் உரக்கிடங்குகள்.
வனத்துறை சார்பில், திருவாரூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 1 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் வனத் தீ கட்டுப்பாட்டு மையக் கட்டடம் மற்றும் திருவாரூர் வனக்கோட்டம், முத்துப்பேட்டை சரகத்தில் படகு குழாம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்புப் பணிகள். பதிவுத்துறை சார்பில், திருவாரூர் பதிவு மாவட்டத்தில் கூத்தாநல்லூரில் 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் சார் பதிவாளர் அலுவலகக் கட்டடம் என மொத்தம் 73 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 1234 முடிவுற்றப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
மேலும், 172 கோடியே 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 600 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 67,181 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






