தூத்துக்குடி: விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

எட்டயபுரத்தைச் சேர்ந்த விவசாயி தனது வீட்டை பூட்டிவிட்டு கோட்டநத்தத்திற்கு விவசாய பணிக்காக சென்றார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் சண்முகவேல்நகர் அலங்காரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சக்திவேல் (வயது 56), விவசாயி. இவருக்கு சொந்த ஊரான விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. இவர் கடந்த 26ம் தேதி எட்டயபுரத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு கோட்டநத்தத்தில் விவசாய பணிக்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து கொண்டு, வீடு முன்பு நிறுத்தியிருந்த காரையும் கடத்தி சென்று விட்டனர்.
நேற்று முன்தினம் காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் சக்திவேல் வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சக்திவேலுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் எட்டயபுரம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அவரும் எட்டயபுரம் வீட்டிற்கு புறப்பட்டு வந்தார்.
அப்போது வீட்டில் பீரோவை உடைத்து 5.5 சவரன் நகைகள், ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த மர்ம நபர்கள், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரையும் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. அசோகன் சென்று விசாரணை மேற்கொண்டார்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கடந்த 26ம் தேதி இரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் கோவில்பட்டி-தூத்துக்குடி மெயின் ரோட்டில் கொள்ளையடித்த நகைகள், பணத்துடன் காரை கடத்தி சென்றது பதிவாகியிருந்தது. இந்த பின்னணியில் எட்டயபுரம் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






