திருப்பூர்: பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்தபோது, நிலைதடுமாறி தம்பதி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள துத்தாரி பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவரது மனைவி சாந்தா (41). இவர்கள் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பல்லடத்தில் நடந்த வாரச்சந்தைக்கு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்து பொருட்கள் வாங்கினர். பின்னர் இரவு 10 மணி அளவில் துத்தாரிபாளையம் நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
பல்லடம் - தாராபுரம் சாலையில், வடுகபாளையம் புதூர் பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது இவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், சாந்தா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்தபோது, நிலைதடுமாறி தம்பதி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் தங்கசங்கிலியை பறித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






