திருப்பூர்: பள்ளத்தில் விழுந்து தம்பதி உயிரிழப்பு, மகள் படுகாயம் - முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் குள்ளாய்ப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் இருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
"திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சூரியநல்லூர் கிராமம், சேர்வக்காரம்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 44) த/பெ.குழுந்தான் என்பவர், தனது மனைவி ஆனந்தி (வயது 38) மற்றும் மகள் தீட்சையா (வயது 12) ஆகியோருடன் நேற்று (3.5.2025) இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்லும் வழியில் தாராபுரம் – காங்கேயம் சாலை, குள்ளாய்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் இருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்து ஏற்பட்டதில் நாகராஜ் மற்றும் ஆனந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீட்சையா என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீட்சையாவிற்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






