தினத்தந்தி- தொழில் அமைப்புகள் சார்பில் திருப்பூர் தின விழா 'வாக்கத்தான்': 23ம் தேதி கலெக்டர் தொடங்கி வைக்கிறார்


தினத்தந்தி- தொழில் அமைப்புகள் சார்பில் திருப்பூர் தின விழா ‘வாக்கத்தான்’: 23ம் தேதி கலெக்டர் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 20 Feb 2025 10:35 AM IST (Updated: 20 Feb 2025 11:37 AM IST)
t-max-icont-min-icon

வாக்கத்தானில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கம் வழங்கப்படுகிறது. காலை சிற்றுண்டி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்

இந்திய சுதந்திர போராட்டத்துக்காக வீரம் செறிந்த தியாகிகளை தந்த திருப்பூர், சிற்றூராக இருந்து மாவட்டமாக உயர்ந்துள்ளது. பின்னலாடை தொழில் மூலமாக டாலர் சிட்டி என்ற பெருமையை பெற்றதுடன் வந்தாரை வாழ வைக்கும் நகராகவும் திருப்பூர் விளங்கி வருகிறது. இத்தகைய திருப்பூர் மாவட்டம் பிப்ரவரி மாதம் உதயமானது.

இதை நினைவுபடுத்தும் வகையிலும், திருப்பூரின் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் திருப்பூர் 'தினத்தந்தி' நாளிதழ் மற்றும் திருப்பூரை சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்பினர் சார்பில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அனைத்துக்கட்சி மக்கள் பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரிகளுடன் இணைந்து 'திருப்பூர் தின திருவிழா' என்ற தலைப்பில் வாக்கத்தான் நடத்தப்படுகிறது. வருகிற 23-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வாக்கத்தான் தொடங்குகிறது.

வாக்கத்தானை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, வால்ரஸ், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், டீமா, நிட்மா, டெக்பா உள்ளிட்ட பின்னலாடை தொழில் அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள், ரேவதி மருத்துவமனை, விகாஸ் வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், ஸ்ரீபுரம் அறக்கட்டளை, அனைத்து மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பினர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்கிறார்கள்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்கத்தான் சிக்கண்ணா அரசு கல்லூரியில் இருந்து தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோட்டில் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ஸ்ரீனிவாசா மகால் முன் திரும்பி மீண்டும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நிறைவு பெறுகிறது. இதுபோல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வாக்கத்தான், காலேஜ் ரோடு சவுடாம்பிகை திருமண மண்டபம் முன் தொடங்கி 1 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நிறைவு பெறுகிறது.

வாக்கத்தான் தொடங்குவதற்கு முன்பாக சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கொங்குநாட்டின் பாரம்பரிய கலையான பெருஞ்சலங்கையாட்டம் நடைபெறுகிறது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். வாக்கத்தான் நிறைவு பெற்றதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்கும் வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் திருப்பூர் தந்த தியாகிகளின் உருவப்படம் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. திருப்பூரின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்களின் உருவப்படங்கள் மற்றும் பனியன் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையின் சிறப்புகள், திருப்பூரின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு அனைவரும் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழில் அமைப்பினர், பொதுமக்கள் என அனைவரும் திருப்பூரின் பெருமையை பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் இந்த வாக்கத்தானில் பங்கேற்று சிறப்பிக்க வருகை தரலாம். வாக்கத்தானில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கம் வழங்கப்படுகிறது.மேலும் காலை சிற்றுண்டி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வாக்கத்தானில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம். இதில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்வது அவசியம். இதற்காக 72999 87037 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு பெயர், வயது, செல்போன் எண், ஊர் ஆகிய விவரங்களை தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம்.

1 More update

Next Story